தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் நாளை (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘பழனிசாமி கூறுவதெல்லாம் ‘ஹம்பக்’ ’ - ஸ்டாலின் சாடல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் ‘ஹம்பக்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், “பொய் மற்றும் பித்தலாட்டம் செய்வது தான் பழனிசாமியின் வேலையாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அவர் ஒரு கோமாளி. எனவே, அதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை.” என்றும் சாடியுள்ளார்.
சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன: “சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றுக்கு ரூ.3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜூன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.” என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைகள், செல்லப் பிராணிகள் பதிவு உள்பட பல்வேறு நடவடிக்கைகளையும் மாநகராட்சி விளக்கியுள்ளது.
மே.16-ல் வெளியாகிறது 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே மே.16-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: சென்னையில் இன்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 8,805 ஆகவும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.70,440 ஆகவும் விற்பனை ஆகிறது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.109 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரமாகவும் மாற்றமின்றி இருந்தது.