புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழில் எப்ஐஆர் தரவும், புதிய குற்றவியல் சட்ட நடைமுறையை மாதந்தோறும் ஆய்வு செய்யவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை அமல்படுத்தி ஓராண்டாகிறது. இது தொடர்பான சீராய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்து விதிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். கூட்டத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் சரத் சவுகான், டிஜிபி ஷாலினி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், "புதுவையில் எப்ஐஆர் தமிழ் மொழியில் மட்டுமே பதிய வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு பிற மொழியில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை புதுவை அரசு சிறப்பாக அமல்படுத்தியுள்ளது. புதிய சட்டங்கள் விரைவில் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கைது செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் கை ரேகைகளும் தேசிய தரவின் கீழ் பதிவு செய்ய வேண்டும். எந்த வழக்கிலும் சட்ட ஆலோசனை வழங்கும் உரிமை அரசு தரப்பு இயக்குனருக்கு மட்டும் இருக்க வேண்டும். இ-சம்மன்ஸ், இ-சாக்ஷா நியாக ஷ்ருதி, தடயவியல் விதிகள் விரைவில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தியது தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி வாரத்துக்கு ஒரு முறையும், உள்துறை அமைச்சர் 15 நாட்களுக்கு ஒரு முறையும், ஆளுநர் மாதம் ஒரு முறையும் ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.