திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள பழமையான பாலம் நேற்று இடித்து அகற்றப்பட்டது. அங்கு ரூ.12 கோடியில் நிகழாண்டு இறுதிக்குள் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி தில்லை நகர்- மெயின் கார்டு கேட் பகுதியை இணைக்கும் வகையில் 159 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான ரயில்வே மேம்பாலம், மிகவும் குறுகலாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அந்தப் பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒருபகுதியில் மழையால் மண் சரிந்ததால் பாலம் வலுவிழந்தது.
இதையடுத்து, அந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட திருச்சி மாநகராட்சி நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.34.10 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம், இணைப்புச் சாலை அமைக்க கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இதில் பாலம் கட்ட மட்டும் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டது.
முதல்கட்டமாக மேம்பாலத்தையொட்டி இரு புறமும் இருந்த இணைப்புச் சாலைகள் அகற்றப்பட்டன. ஆனால், ஒப்பந்ததாரர் பிரச்சினை காரணமாக பாலம் அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டாக பணிகள் மந்தமாக நடைபெற்றதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
இதற்காக இந்த வழித் தடத்தில் செல்லும் 7 ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதுடன், சில ரயில்களின் சேவையிலும் மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ரயில்வே கட்டுமானப் பிரிவு துணை தலைமை பொறியாளர் வினோத் குமார் தலைமையில், உதவி பொறியாளர் வெங்கட்ராமன் முன்னிலையில், 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இப்பணி பிற்பகல் 3 மணிக்கு முடிக்கப்பட்டது.
இது குறித்து பாலம் இடிப்புப் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜின்டோ கூறியது: காலை 8 மணி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டன. சுமார் 5 மணி நேரத்தில் பாலத்தை இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து 600 டன் கட்டிட கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு, ரயில்வே காலி இடத்தில் கொட்டப்பட்டன என்றார்.
இது குறித்து ரயில்வே அலுவலர் ஒருவர் கூறியது: பாலம் இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.12 கோடியில் 30 அடி நீளம், 10.5 அடி அகலத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இன்னும் 20 நாட்களில் பணிகளை தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.