புதுக்கோட்டை: வடசேரிப்பட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு இலுப்பூர் கோட்டாட்சியர் அக்பர் அலி தலைமை வகித்தார். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் போட்டியைத் தொடங்கிவைத்தார்.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 225 வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர்.ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் 10 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். போட்டியை முன்னிட்டு வெள்ளனூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, திருவரங்குளம் அருகே வல்லத்திராகோட்டை மற்றும் மணமேல்குடி அருகேயுள்ள கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய இடங்களில் நேற்று மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.