கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதுகுறித்து சட்ட வல்லுநர்கள் கூறியதாவது: சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது, வழக்கமான ஆயுள் தண்டனையிலிருந்து வேறுபட்டது. வழக்கமான ஆயுள் தண்டனையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை சாத்தியமாகும். ஆனால், நிர்பயா வழக்கு உத்தரவைத் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு 376-டி புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தில், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன.
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சி விவரங்களை சிபிஐ ரகசியம் காத்தது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது, குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 9 பேரும் தங்களின் இயற்கை மரணம் வரை சிறையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த வழக்கில் கூட்டுச்சதி, விரும்பத்தகாத பாலியல் சீண்டல், ஆடைகளைக் கழற்றி நிர்வாணப்படுத்துதல், ஆள் கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, தொடர் கூட்டு பாலியல் வன்கொடுமை, மானபங்கம் செய்தல், ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோவைப் பகிர்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
48 சாட்சிகள்... இந்த வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசு, எதிர்தரப்பு என 240 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. லேப்டாப், செல்போன், மெமரிகார்டு, கார் உள்ளிட்ட 30 வகையான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகைகள் 390 பக்கங்கள், விசாரணை ஆவணங்கள் உட்பட மொத்தம் 1,500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசுத் தரப்பில் 76 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பாலியல் வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.