தமிழக நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்


சென்னை: இந்தியாவில் கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாகவும், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.1.25 லட்சம் கடனோடு பிறப்பதாக தெரிவித்து, அதை சீர்செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

ஆனால் சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதைப் பொருட்களின் நடமாட்டம், மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கிய திமுக, இந்தியாவில் கடன் பெறுவதிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்கியிருப்பதாக பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 மார்ச் மாதம் ரூ.4.85 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை, திமுக ஆட்சியின் முடிவில் ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து 2021-ம் ஆண்டு வரை பெற்ற கடன் தொகை ரூ.4.85 லட்சம் கோடி. ஆனால் திமுக ஆட்சிக்கு பிறகு, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பெற்ற கடன் ரூ.4.44 லட்சம் கோடி. இதுதவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றை சேர்த்தால் கடன் தொகை ரூ.15 லட்சம் கோடியை தொட்டுவிடும்.

திமுக அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கை, தவறான நிதி மேலாண்மை காரணமாகவே தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. வரி மற்றும் கட்டணங்கள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தும், ரூ.5 லட்சம் கோடிக்கு கடன் பெற்றிருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு. இந்த அளவுக்கு கடன்பெற வேண்டிய அவசியம் தேவையற்றது. எனவே திமுக அரசு, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

x