பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு: டாப் 5 விரைவுச் செய்திகள்


“இது ஓர் எச்சரிக்கை மணி!” - டிடிவி தினகரன்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், அதற்கு இணையாக தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை இனியாவது உணரவேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன், என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு கம்யூனிஸ்டுகள் வரவேற்பு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து கோவை மகளிர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு: ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதில், மே 14-ம் தேதியிலிருந்து, ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில் காலை மாலை 6 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கும், இரண்டாவது சேவை காலை 10.45 மணிக்கு பதில் 10.30 மணிக்கும், மூன்றாவது சேவை பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும் புறப்படும்.

“பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு ஒரு பாடம்” - ஜி.கே.வாசன் கருத்து: “இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு: பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

x