கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியில் அமைக்க கோரிஅனைத்து கட்சி, குடியிருப்போர் சங்கம்,பொதுநல இயக்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
கடலூர் பேருந்து நிலையத்தை கடலூரின் மையப் பகுதியில் அமைக்க வேண்டும், கடலூர் பேருந்து நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றும் முயற்சியை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அனைத்து கட்சி, குடியிருப்போர் சங்கம், பொது நல இயக்கங்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று (மே.13) காலை 11.45 மணியளவில் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், குடியிருப்போர் சங்கத்தினர், பொது நல இயங்கங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ மாதவன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான தாமரைச் செல்வன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்ட அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன் நகர செயலாளர் ராஜ துரை , காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் பாண்டு ரங்கன், மீனவ பேரவை நிறுவன தலைவர் ஏகாம்பரம், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் மருதவாணர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, கடலூர் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ரவி, கடலூர் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் பக்கீரான், பான்பரி மார்க்கெட் ராஜா, மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சௌமியா, வாலிபர் சங்க மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தையொட்டி பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.