கோவை: விவசாயிகள் பயன்பெற உதவும் வகையில் மே 31-ம் தேதி வரை பிரதமர் கவுரவ நிதி திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம் (பிளம்கிஸான்) தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெற உதவும் வகையில் கோவை மாவட்டத்தில் மே 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.
அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் வருகிற மே 31ம் தேதி முகாம் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் 20-வது தவணை வரும் ஜூன் 2025 மாதத்தில் வழங்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற அனைத்து விதமான பி.எம்.கிஸான் முழுமையற்ற விவரங்களை சரி செய்து பயன்பெறலாம்.
தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம். கிஸான் 19 வது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில், 9,419 விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொள்ளவில்லை. விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொண்டு 20 வது தவணை தடையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
இறந்த பயனாளிகள் விவரம் சமர்ப்பிக்காமல், இறந்த பின் தவணைத் தொகையை பெற்று வருவது ஆய்வில் தெரியும் பட்சத்தில் அத்தொகை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே, இறந்த பயனாளிக ளின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன் பெற தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.