சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் கண்மாய் கரையில் உள்ள பொது சுகாதார வளாகத்தை நள்ளிரவில் வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் தலைமையில் பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் நம்ம டாய்லெட் திட்டத்தில் கட்டப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுகாதார வளாகம் கடந்த மார்ச் மாதம் ரூ.12.60 லட்சம் மதிப்பில் சீரமைக்கப் பட்டது.
இந்நிலையில், நீர்நிலை பகுதியில் அனுமதி இன்றி சுகாதார வளாகம் கட்டப்பட்டதாக கூறி இடித்து அப்புறப்படுத்த வட்டாட்சியர் உத்தரவிட்டார். மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு அனுமதி கோரி முன்வைக்கப்பட்ட தீர்மானம் கவுன்சிலர் எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது.
மே.6-ம் தேதி சுகாதார வளாகத்தை இடிப்பதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்த நிலையில், திமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. இதையடுத்து, கவுன்சிலர் துரை பாண்டி மீது தற்கொலை முயற்சி மற்றும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு வருவாய்த் துறையினர் சுகாதார வளாகத்தை இடிக்க வந்த நிலையில் கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சுகாதார வளாகத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு பகுதியை இடித்த நிலையில் தகவலறிந்து கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இன்று காலை 9 மணிக்கு மாநகர் திமுக செயலாளர் உதய சூரியன், திமுக கவுன்சிலர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் சுகாதார வளாகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுகாதார வளாகம் முன் பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.