பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு விஜய் வரவேற்பு: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று அறிவித்தது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 5 சதவீதம் அளவுக்கு அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் 88.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும்.
பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தாரைவார்ப்பு: அன்புமணி சாடல் - தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் இயக்குவதற்காக தெற்கு ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்ப்பட்ட 20 வந்தேபாரத் ரயில்வண்டிகளுக்கான பெட்டிகளில் 9 ரயில்வண்டிகளுக்கான பெட்டிகள் ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘பொள்ளாச்சி வழக்கில் உரிய நீதி கிடைத்துள்ளது’ - அதிமுக: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது, என்று அதிமுக தெரிவித்துள்ளது.