திண்டுக்கல்: ராணுவ வீரர்களுக்கு தெய்வீக பாதுகாப்பும், வலிமையும் கிடைக்க வேண்டி ஆந்திரா மாநிலம் காக்கிநாடா எம்எல்ஏ பந்தம் வெங்கடேஷ ராவ் தலைமையில் ஜனசேனா கட்சியினர் பழநி முருகன் கோயிலில் இன்று (மே 13) சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண், நாட்டுக்காக போராடும் ராணுவத்துக்கும், நாட்டின் தலைமைக்கும் துணையாக தெய்வீக பலம் கிடைக்க வேண்டி, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் வழிபாடு நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆந்திரா மாநிலம் காக்கிநாடா சட்டமன்ற உறுப்பினர் பந்தம் வெங்கடேஷ ராவ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் இன்று (மே 13) காலை பழநி முருகன் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் தேசியக்கொடி மற்றும் வாழ்க பாரதம் எனும் வாசகம் அடங்கிய பதாகையுடன் மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பந்தம் வெங்கடேஷ ராவ் கூறியது: “கட்சித் தலைவரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் வழிகாட்டுதல்களின்படி, தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இது உலகுக்கு இந்தியாவின் ராணுவ வலிமையை அடையாளமாக வெளிப்படுத்துவதையும், சிந்தூர் ஆபரேஷனின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற முக்கியமான எல்லைப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்ட நமது வீரர்களுக்கு தெய்வீக பாதுகாப்பும், வலிமையும் அவசியம். ‘தேசமே முதலில்’ என்ற நம்பிக்கையை துணை முதல்வர் பின்பற்றி வருகிறார்.
இந்த தேசியவாத உணர்வு இந்த முயற்சியை வழிநடத்தியது. பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் தங்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தின் கொடூரமான செயலாகும். அதற்கு, இந்தியா வலிமையுடனும் தெளிவுடனும் பதிலளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாம் அனைவரும் விழிப்புடனும், தேசியத் தலைமைக்கு ஆதரவாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.