குமராட்சியில் ஊருக்குள் நள்ளிரவில் நுழைந்த முதலை - வனத்துறையிடம் ஒப்படைப்பு


காட்டுமன்னார்கோவில் வட்டம், குமராட்சி பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் வேலப்பன். இவர், வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நாய்கள் அதிகமான குரைக்கும் சத்தம் கேட்டது. வேலப்பன் வீட்டில் இருந்து எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் வராண்டாவில் 10 அடி நீளமும், சுமார் 100 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேலப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற தமிழ் வாணன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் கமலக் கண்ணன், ராஜமலை சிம்மன், வினோத், குமார், ராம ஜெயம் ஆகியோர் முதலையை லாவகமாக பிடித்து, கயிற்றால் கட்டிப் போட்டனர். இரவு முழுவதும் பத்திரமாக வைத்திருந்தனர்.

சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து நேற்று காலை தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்த வனவர் பன்னீர்செல்வம், வன காப்பாளர் ஞானசேகரன், ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, முதலையை மீட்டு பத்திரமாக கொண்டு சென்று. சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

x