உரிய விலையும், விற்பனையும் இல்லாத நிலையில் ஓசூரில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டி வீணாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஓசூர், உத்தனப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் 60 சதவீதம் குறுகிய காலத்தில் விளையும் தக்காளி, கத்தரி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பத்தலப்பள்ளி காய் கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு போதிய வழிகாட்டுதல் இல்லாததால், ஒரே நேரத்தில் ஒரே பயிர்களை சாகுபடி செய்வதால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, விலையும், விற்பனையும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, தக்காளி மற்றும் கத்தரிக் காய்க்கு உரிய விலையும், விற்பனையும் இல்லாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் கத்தரி மற்றும் தக்காளி மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், தேவைக்கு அதிகமாக சந்தைக்கு வரத்து அதிகரித்து, இதனால், கத்தரிக்காய் கிலோ ரூ.10-க்கும், தக்காளி ரூ.4-க்கும் விலை சரிந்துள்ளது. மேலும், நுகர்வுக்கு அதிகமாக விற்பனைக்கு வருவதால், விற்பனையும் சரிந்துள்ளது. இதனால், விற்பனையாகாத காய்கறிகளை சாலையோரங்களில் கொட்டுவதால், வீணாகி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.