கூவாகத்தில் களைகட்டுகிறது கூத்தாண்டவர் திருவிழா: மிஸ் திருநங்கையாக தூத்துக்குடி சக்தி தேர்வு


விழுப்புரத்தில் நடந்த கூவாகம் திருவிழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி, 2-ம் இடம் பிடித்த சென்னை ஜோதா (இடது), 3-ம் இடம் பிடித்த சென்னை விபாஷா. | படம்: எம்.சாம்ராஜ் |

விழுப்புரம்: கூத்தாண்டவர் திருவிழாவுக்காக கூவாகத்தில் திருநங்கைகள் குவிந்தனர். இதையொட்டி நடத்தப்பட்ட போட்டியில், `மிஸ் திருநங்கை' பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி வென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில் இன்று (மே 13) கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் ‘கூவாகம் திருவிழா - 2025’ விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

முன்னிஜி நாயக் தலைமை வகித்தார். விழுப்புரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் திருவிழாவை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள 22 திருநங்கைகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கிப் பாராட்டினரா்.

விழாவில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, நடிகர் விஷால் சிறப்புரையாற்றினர். மிஸ் திருநங்கை பட்டத்துக்கான போட்டியில் 14 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி வென்றார். 2-வது இடத்தை சென்னையைச் சேர்ந்த ஜோதா, 3-வது இடத்தை சென்னையைச் சேர்ந்த விபாஷா ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. விழா மேடையில் நடிகர் விஷால் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. சிறிது நேரத்தில் அவர் இயல்புநிலைக்குத் திரும்பினார்.

‘மிஸ் திருநங்கை’ பட்டம் வென்ற சக்தி கூறும்போது, “முதல் முறையாக பங்கேற்ற அழகிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்களும் போராடித்தான் வளர்ச்சி பெற்று வருகிறோம். எங்களை ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர், இனிமேல் எங்களை ஏற்பார்கள் என்று நம்புகிறோம். பெற்றோர் ஏற்றுக் கொண்டால், எங்களால் நிறைய சாதிக்க முடியும்.

திருநங்கைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், கல்வி கற்க வேண்டும். ‘கல்வி’ என்ற ஆயுதம் இருந்தால் சாதிக்கலாம். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.

x