தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில், நாய்கள் வளர்ப்பிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தெரு நாய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் 75 நாட்களில் 1.18 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாய்க்கடி பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 2ம் தேதி கூட்டி, ஆலோசனை நடத்தினர். இதில், தெரு நாய்களின் பெருக்கத் தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம், நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப் பாடுகளையும் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் எஸ்.விஸ்வநாதன் கூறியதாவது: 100 கால் நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை வசதி உருவாக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 500 பேருக்கு நாய்களை பிடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். கைவிடப்பட்ட, நோய் வாய்ப் பட்ட, காயம் அடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களை பராமரிக்க 72 காப்பகங்கள் உருவாக்கப்படும். ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும், உள்ளூர் கண்காப்பு குழு அமைத்து நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்படும். தேவைக்கு ஏற்ப நாய் பிடி வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இவை, நாய்களின் தொல்லையால் மாணவர்கள், பொதுமக்கள் எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தமிழக அரசு உணர்ந் திருப்பதை அறிய முடிகிறது. அதேசமயம், கிராமங்களில் பெரும்பாலும் வீட்டுக்கொரு நாய் வளர்க்கப்படுகிறது. அவை, வீடுகளில் அல்லாமல், சாலையில் செல்வோருக்கும் மிகவும் தொல்லையாக உள்ளது. இரவு நேர ரோந்து பணிகளுக்கு செல்ல முடியவில்லை என போலீஸார் புலம்பு கின்றனர்.
நகர் பகுதியிலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் திரிவதையும் பார்க்க முடிகிறது. எனவே, நாய்களை வளர்ப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, கால்நடை மருத்துவர்களின் பராமரிப்புச் சான்று உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதிக்க வேண்டும். அப்போதுதான், தெருநாய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றார்.
இது குறித்து நாய், பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கு காப்பகம் நடத்தி வரும் வீ.ர.சரக்பவார் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு இடத்தில் பிடிக்கப் படும் நாய்களை மற்றொரு இடத்தில் விடுவதே நாய்கள் பிரச்சினை அதிகமாவதற்கு காரணம். உதாரணமாக, புதுக்கோட்டையில் இருந்து 180-க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான நாய்கள், வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், உடல்நலக் குறைவுடன்கூடிய தெருநாய்களை பிடித்து ஒரு வாகனத்தில் ஏற்றி, எங்களது காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதனால், அதிகமான நாய்களுக்கு வெறி நோய் தொற்றியது.அதன் பிறகு, மாநகராட்சியின் உதவியின்றி நாங்களே வெறி நோய் செலுத்தி, நாய்களை பராமரித்து வருகிறோம். அதோடு, புதுக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியை இலவசமாக செலுத்தினோம். உள்ளாட்சி அமைப்புகள் இதுபோன்ற செயல்களை தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும். பிடிக்கப்படும் அனைத்து நாய்களையும் ஒன்றாக சேரவிடக்கூடாது.
மேலும், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள கருத்தடை மையங்களை செயல்பாட்டு க்கு கொண்டு வர வேண்டும். ஏனெனில், கருத்தடை செய்து மட்டுமே நாய்கள் எண்ணிக்கையை சட்ட ரீதியாக குறைக்க முடியும். தமிழக அரசின் உத்தரவை வரவேற்கிறோம். அதே சமயம், தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு எத்தகைய திட்டங்களை வகுத்தாலும், அதை முறையாக உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப் படுத்தினால் மட்டுமே திட்டம் வெற்றியடையும் என்றார்.