கோவையில் அரசு உத்தரவை மீறி தொடரும் ‘மயோனைஸ்’ விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை


கோவை: தமிழகத்தில் ஓராண்டு காலத்திற்கு முட்டை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மையோனைஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் கோவை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான உணவகங்களில் மையோனைஸ் விற்பனை தொடர்கிறது.

‘மயோனைஸ்’ என்பது முட்டையின் வெள்ளைக் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளாகும். சமைக்கப்படாத முட்டை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அதன் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சமைக்கப்படாத முட்டையை பயன்படுத்தி மயோனைஸ் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் கூடாது என்றும், அவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா, தந்தூரி, பிரட் ஆம்லெட், கிரில் சிக்கன் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளுக்கு மையோனைஸ் வழங்கப்படுவது தொடருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள், இளைஞர்கள் பலர் விரும்பி உட்கொள்ளும் அசைவ உணவு வகைகளுடன் மையோனைஸ் வழங்கப்படுவதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “சமைக்கப்படாத முட்டையில் உள்ள பாக்டீரியாக்கள், மனித உடலில் தீவிரமான தொற்று நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதால், பாதுகாப்பு கருதி தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பூண்டு உள்ளிட்ட சைவ பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கும் மயோனைஸுக்கு தடை இல்லை. இருப்பினும், கோவை மாவட்டத்தில் விதிமீறல்கள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் கூறும்போது, “முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மையோனைஸ் உணவு பொருள் விற்பனை செய்ய தமிழகத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் விதிமீறல்கள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x