மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இன்று காலை பைப் லைன் திடீரென உடைந்து டீசல் வெளியேறியது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்த பைப்பை சரிசெய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகா வாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் முதல் பிரிவில் 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதல் அலகில் டீசல் பைப் லைன் இன்று காலை திடீரென உடைந்து, டீசல் கால்வாய் வழியாக வெளியேறியது. இது குறித்து தகவலறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து டீசல் கால்வாய் வழியாக வெளியேறி காவிரி ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனல் மின் நிலைய அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தை கொண்டு உலர் சாம்பலை கால்வாய் பகுதியில் நிரப்பி டீசல் வெளியேறாமல் தடுத்தனர். பின்னர். தீயணைப்பு துறையினர் டீசல் பைப் லைன் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை அடித்தனர். மேலும், டீசல் பைப் லைன் உடைந்த பகுதியை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உரிய நேரத்தில் விபத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலைய தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் தொடர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிக்கு ஊழியர்கள் செல்ல தடை விதிகப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அனல் மின் நிலையம் முதல் பிரிவில் முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர், பைப் லைன் சரிசெய்த பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.