ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் தங்குமிடம்!


ராஜபாளையம்: ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறப்பு தங்குமிடம் பூட்டி கிடப்பதால் கர்ப்பிணி தாய்மார்களின் உறவினர்கள் வராண்டாவில் படுத்து தூங்கி வருகின்றனர்.

ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளின் உதவியாளர், பெற்றோர் தங்குவதற்காக நகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் 2017- 2018 கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் சிறப்பு தங்குமிடம் கட்டப்பட்டது. இங்கு படுக்கை, மின் விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதியுடன் தன்னார்வ தொண்டு அமைப்பினர் பராமரிப்பில் குறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக மத்திய அரசு சார்பில் நகராட்சிக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டது.

சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்த சிறப்பு தங்கும் இடம், அதன்பின் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள் உடன் வார்டில் வேறு யாரும் தங்குவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில், தங்குமிடமும் செயல்படாததால் உதவியாளர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வராண்டா மற்றும் படிக்கட்டுகளில் இரவில் படுத்து தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிறப்பு தங்கும் இடத்தில் ஒரு பகுதி பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்புக்கான கர்ப்பிணிப் பெண்கள் உள் நோயாளிகள் விரிவாக செயல்பட்டு வருகிறது. மற்றொரு பகுதி பல மாதங்களாக பூட்டிய கிடப்பதால் அங்கிருக்கும் கட்டில், மெத்தை ஆகியவை சேதம் அடைந்து வருகிறது. ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிறப்பு தங்கும் இடத்தை திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

x