திடீர் வரி உயர்வு: ராஜபாளையத்தில் வரி செலுத்தாத வாகன காப்பகங்களுக்கு சீல் வைப்பு


ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் உள்ள வாகன காப்பகங்களுக்கான வரி முன்னறிவிப்பு இன்றி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.1.30 லட்சமாக உயர்த்தப்பட்ட நிலையில், வரி செலுத்தவில்லை எனக் கூறி அதிகாரிகள் சீல் வைத்து வருவதால் வாகன காப்பகம் நடத்துபவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ராஜபாளையம் நகராட்சியில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சங்கரன்கோவில் மூக்கு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் 30 வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. இங்கு நகரின் மைய பகுதியில் நெரிசல் மிகுந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களின் கார்கள், வாடகை கார்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆகியவை மார்க வாடகை அடிப்படையில் நிறுத்தப்பட்டு உள்ளது.

நகராட்சி சார்பில் வாகன காப்பகங்களுக்கு பரப்பளவை பொறுத்து ரூ.1,000 முதல் ரூ.8 ஆயிரம் வரை வரி விதிக்கப்பட்டு வந்துள்ளது. 2024 - 2025 நிதியாண்டுக்கான வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாகன காப்பகம் நடத்துபவர்கள் வரி செலுத்தி விட்டனர். இந்நிலையில் அனைத்து வாகன காப்பகங்களுக்கும் 2024 - 2025 நிதியன்டிற்கான வரி செலுத்தவில்லை எனக் கூறி அபராதத்துடன் ரூ.1.30 லட்சம் செலுத்தக் கோரி கடந்த வாரம் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

முன்னறிவிப்பு இன்றி வரி உயர்த்தப்பட்டது குறித்து வாகன காப்பக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நகராட்சி மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வாகன காப்பகத்திற்கு வரி செலுத்தவில்லை எனக் கூறி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றனர். இதனால் வாகன காப்பகத்தில் கார், ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தியவர்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது குறித்து வாகன காப்பக உரிமையாளர்கள் கூறுகையில், “ராஜபாளையத்தில் 90 சதவீதம் வாகன காப்பகங்கள் வாடகை இடத்தில் தான் நடத்தப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு, மார்ச் மாதத்திற்கு முன்னதாகவே வரி செலுத்தி விட்டோம். இந்நிலையில் தற்போது இறந்த வெளியிலும், தகர செட்டிலும் அமைக்கப்பட்டுள்ள வாகன காப்பகங்களுக்கு வணிக கட்டிடங்களுக்கான வகை பிரிவின் கீழ் சதுர அடிக்கு ரூ.36 வீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

2024 - 2025 நிதியாண்டில் அபராதத்துடன் சேர்த்து அனைத்து வாகனத்தில் காப்பங்களுக்கும் சராசரியாக ரூ.1.30 லட்சம் என்ற அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு மனு அளித்த நிலையில், தற்போது அதிகாரிகள் வாகன காப்பகங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாக துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

நகராட்சி வருவாய் அலுவலர் முத்துசெல்வம் கூறுகையில், “வாகன காப்பகம் மற்றும் பெட்ரோல் பல்க் ஆகியவற்றிற்கு புதிதாக வரி விதிக்க அரசு உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே 2024 - 2025 முதல் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கிய பின்னரே வரி செலுத்தாத வாகன காப்பகங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

x