மாநில சுயாட்சி என கூறிக் கொண்டு திமுக ஆட்சியில் தான் எல்லா உரிமைகளும் பறிபோயின: சீமான்


படம்: ஆர்.வெங்கடேஷ்

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கூட்டரசு கோட்பாடு சிறப்பு மாநாடு தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இதில், 'தமிழர் வரலாற்று வளம்' என்ற தலைப்பில் கருத்தரங்க ம், 'தமிழ் மேல் ஆணை' என்ற தலைப்பில் பாவரங்கம், கலைநிகழ்ச்சிகள், நூல் வெளியீடு ஆகியன நடைபெற்றன.

மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என முன்னாள் முதல்வர் கருணாநிதி முழங்கினார். ஆனால், தற்போது மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என திமுக மாறிவிட்டது. மாநில சுயாட்சி என பேசிக் கொண்டே மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் திமுக ஆட்சியின் போது தான் பறிபோனது. சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமை எல்லாம் வெற்று வார்த்தைகள்.

நீட் தேர்வு, ஜிஎஸ்டியை கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு உறுதுணையாக இருந்தது திமுக தான். மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு எடுத்துக்கொண்ட போது, திமுக அமைதியாக இருந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், நாட்டு பாதுகாப்பு, நாணய அச்சடிப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த அதிகாரத்தை மட்டுமே கூட்டாட்சி அரசுக்கு வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிவழி தேசிய இனங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட சம நிலை மன்றமாக இந்திய நாடாளுமன்றம் அமைய வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு மேலதிகாரம் உள்ள ஆளுநர் என்ற பதவி தேவையில்லை. ஆட்சிக் கலைப்பு அதிகாரமான சட்டப்பிரிவு 356-ஐ நீக்க வேண்டும். இந்திய கூட்டரசுக்கு ஒற்றை ஆட்சி மொழி என இல்லாமல், அனைத்து மொழிகளும் ஆட்சிமொழிகளாக விளங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x