[X] Close

நீதிதேவதை கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள் – 3 பேர் விடுதலை; மாணவியின் தந்தை உருக்கம்


dharmapuri-bus

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 20:51 pm
  • அ+ அ-

நீதி தேவதை கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள் என்று 3 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக, பஸ் எரிப்பில் இறந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ம் வருடத்தில், பிப்ரவரி 2ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, பிளசெண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. அதில் ஆத்திரமடைந்த அதிமுகவினர் கல்வீச்சு, கலவரம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தீர்ப்புக்கு எதிரான கண்டனக்குரல்கள் கட்சியினரிடையே இருந்த நிலையில், தருமபுரியில் வேளாண்மைப்பல்கலைக் கழக மாணவர்கள் வந்த பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. அலறியடித்துக்கொண்டு எல்லோரும் ஓடினார்கள். அந்த பஸ்சுக்கு தீவைத்தார்கள். இதில் பஸ்சில் இருந்த வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டார்கள்.  கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூவரும் உடல் கருகி இறந்தார்கள்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. முதலில், இந்த மூன்று குற்றவாளிகளுக்கும் தூக்குதண்டனைதான் வழங்கப்பட்டது. பிறகு அவர்களின் கருணைமனுவால், ஆயுள்தண்டனையாக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மூவரையும் விடுவிக்கும்படி பரிந்துரைத்து, தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் அளித்தது.

அதன்படி தண்டனை அனுபவித்து வந்த மூன்று அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இதுகுறித்து  தர்மபுரி பஸ் எரிப்பின் போது பரிதாபமாக இறந்த மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் தெரிவித்ததாவது:

என் மகள் உட்பட மூன்று மாணவிகளையும் கொன்ற மூன்று பேரையும் விடுதலை செய்தது, வருந்தத்தக்க செய்தி. ஆனால் அதேசமயம், இது சாதாரணமான ஒன்றுதான். முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை.

சுப்ரீம் கோர்ட்டில் ஜனாதிபதி கருணை மனு ஏற்றுக்கொண்ட பிறகு, மூன்று குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட மரணதண்டனையானது, ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டபோதே, நீதிதேவதை தலைகுனிந்து, வெட்கப்பட்டுக்கொண்டு, வருந்தியபடி கண்ணீர் வடித்தாள்.

இன்னும் நீதிதேவதை கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள். இப்போது அந்த மூன்று குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இப்போதும் நீதிதேவதை கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள். என் வருத்தத்தையும் சோகத்தையும் நீதிதேவதையிடமே ஒப்படைக்கிறேன்.

இவ்வாறு மாணவியின் தந்தை வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close