[X] Close

எரிக்கலாம், கொளுத்தலாம், கொல்லலாம் என்பதை ஊக்குவிப்பது போலாகிவிடும்; 3 பேர் விடுதலைக்கு வாசுகி கண்டனம்


dharmapuri-bus-case

(கோப்புப் படம்)

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 19:56 pm
  • அ+ அ-

தர்மபுரி பஸ்சில் இருந்த மூன்று மாணவிகளைக் கொல்லப்பட்டவர்களை விடுதலை செய்திருக்கிறார்கள். இதனால், எரிக்கலாம், கொளுத்தலாம், மனிதர்களைக் கொல்லலாம் என்பதையெல்லாம் ஊக்குவிப்பது போலாகி விடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாசுகி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி பஸ் எரிப்பில் மூன்று மாணவிகள் உடல் கருகி இறந்ததை யாரால்தான் மறக்கமுடியும்? அந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மூன்று அதிமுகவினரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2000ம் வருடத்தில், பிப்ரவரி 2ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக, பிளசெண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில், குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது. அதில் ஆத்திரமடைந்த அதிமுகவினர் கல்வீச்சு, கலவரம் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தீர்ப்புக்கு எதிரான கண்டனக்குரல்கள் கட்சியினரிடையே இருந்த நிலையில், தருமபுரியில் வேளாண்மைப்பல்கலைக் கழக மாணவர்கள் வந்த பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது. அலறியடித்துக்கொண்டு எல்லோரும் ஓடினார்கள். அந்த பஸ்சுக்கு தீவைத்தார்கள். இதில் பஸ்சில் இருந்த வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டார்கள்.  கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூவரும் உடல் கருகி இறந்தார்கள்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. முதலில், இந்த மூன்று குற்றவாளிகளுக்கும் தூக்குதண்டனைதான் வழங்கப்பட்டது. பிறகு அவர்களின் கருணைமனுவால், ஆயுள்தண்டனையாக்கப்பட்டது.

இந்த நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மூவரையும் விடுவிக்கும்படி பரிந்துரைத்து, தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் அளித்தது.

அதன்படி, அந்தக் கடிதத்தையும் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, இதுகுறித்து தெரிவித்ததாவது:

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி, அதிமுக அரசு, தர்மபுரி மாணவிகளைக் கொன்று தண்டனை அனுபவித்து வரும் மூன்று பேரையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதம் கொடுக்க, அதை ஆளுநரும் எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை. 3 பேரையும் மன்னிக்கமுடியாது. 3 பேர் விடுதலையையும் ஏற்கமுடியாது. இது அதிர்ச்சியை அளிக்கிறது.

இனி வருங்காலத்தில், ஒரு கட்சியினர் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக எரிக்கலாம், கொளுத்தலாம், தேவைப்பட்டால் மனிதர்களைக் கொல்லலாம். எதுவேண்டுமானாலும் செய்யலாம் எனும் மோசமான முடிவுக்கு இது வழிவகுத்துவிடும். அதை ஊக்குவிப்பது போலாகிவிடும்.

3 மாணவிகளைக் கொன்று தண்டனை அனுபவித்து வரும் 3 பேரை விடுவிக்கக் கூடாது. இது தேவையற்றது.

இவ்வாறு வாசுகி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close