கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சிறப்பு வருகை திட்டத்தின் மூலம் மே 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆஸ்திரேலிய தூதரக உயர் ஆணையர் பிலிப் கிரீன், வானதி சீனிவாசனுக்கு அனுப்பியுள்ள அழைப்பிதழில், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை அதிகரிப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி உள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் பாலின சமத்துவத்தை ஆதரிப்பதில் அவரது பணி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தின் போது, வானதி சீனிவாசன் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் இந்திய புலம் பெயர் சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடுவார். மேலும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகம் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த சமத்துவ நிபுணர்களுடன் உரையாட உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா சிறப்பம்சங்களை பார்வையிடும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். வானதி சீனிவாசனின் இந்த பயணம், சமத்துவம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் குறித்த சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.