[X] Close

'வடசென்னையை தவறாகக் காண்பித்தது போதும்'- படப்பிடிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்கள்


vadachennai

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 17:01 pm
  • அ+ அ-

படங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் பொறுமையிழந்த மீனவர்கள், துறைமுகத்துக்குள் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று காசிமேடு துறைமுக மேலாண்மைக் குழுவிடம் கடிதம் அளித்துள்ளனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை அன்று துறைமுகத்துக்குள் நடக்க இருந்தது. ஆனால் படக்குழுவினரை உள்ளே நுழையவிட மறுத்த மீனவர்கள், படத்தை எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

வடசென்னை குறித்தும் மீனவர்கள் பற்றியும் தவறான விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை என்று சுசீந்திரன் கடிதம் கொடுத்த பிறகே படப்பிடிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

களஞ்சியல் சினி ஆர்ட்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட  'சாம்பியன்' படத்தில் குறிப்பிட்ட பகுதி மக்களைத் தவறாகக் காட்டும் சீன்கள் இல்லை என்றும் படத்தில் குறிப்பிட்ட பகுதி மக்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றும் உறுதி கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்துப் பேசிய இந்திய மீனவர்கள் சங்கத் தலைவர் எம்.டி.தயாளன், ''சென்னை துறைமுகத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.2.88 லட்சத்தை அவர்கள் செலுத்திவிட்டனர். அதனால் அவர்கள் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்தோம். துறைமுகம் நாங்கள் பணிபுரியும் இடம். அங்கே வெளியாட்கள் ஊடுருவுவதை அனுமதிக்க முடியாது.

மோசமான சித்தரிப்பு

வடசென்னையும் மீனவ மக்களும் தொடர்ந்து மோசமாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இதனால் நாங்கள் சோர்ந்துவிட்டோம். கொலைகளும் குற்றங்களும் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. இங்கு மட்டுமே அல்ல.

அப்படி ஒரு விபத்து இங்கே நடந்தால், எங்கள் மக்கள் உடனடியாக ஓடிச் சென்று உதவுவர். மற்றவர்களைப் போல சம்பவ இடத்தில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமில்லை. இங்கு யாராவது பெண்களிடம் தவறாக நடக்க முயன்றால், எங்கள் ஆண்களே அவர்களைத் துவைத்துவிடுவார்கள்'' என்கிறார்.

தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தைச் சேர்ந்த பாரதி கூறும்போது, ''படங்களில் எங்களை மோசமாகக் காட்டுவதால், பொதுமக்களும் எங்களை அப்படியே பார்க்கின்றனர். இத்தனை ஆண்டுகளாகப் படங்கள் செய்த தவறை, படங்களே சரிசெய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார்.

துறைமுகத்தில் 6 மாதங்கள் படப்பிடிப்பை நடத்திய 'வடசென்னை' படக்குழு, படக் காட்சிகளாலும் வசனங்களாலும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close