கொடைக்கானல் தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ‘ரோடு ஷோ’


கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான தாண்டிக்குடி கிராமத்தில் திடீர் ‘ரோடு ஷோ’ நடத்திய தவெக தலைவர் விஜய்.

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் தவெக தலைவர் விஜய் திடீர் ரோடு ஷோ நடத்தினார். கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி மலைக் கிராமமான தாண்டிக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெக தலைவர் விஜய் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

இதற்காக மே 1-ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து தாண்டிக்குடிக்கு காரில் வந்தார். மே 2-ம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது, மக்கள் அவரைக்காண சாலையோரத்தில் காத்திருந்தபோதும் படப்பிடிப்பு முடிந்து காரில் தங்கும் விடுதிக்குச் சென்றுவிட்டார்.

மே 3-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து மாலையில் ஹோட்டலுக்கு திரும்பிய விஜய் திடீரென திறந்த ஜீப்பில் பயணித்து ‘ரோடு ஷோ’ நடத்தினார். சாலையின் இருபுறமும் காத்திருந்த உள்ளூர் மக்கள், வெளியூர்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள், கட்சியினர், அவரை திறந்த வாகனத்தில் கண்டவுடன் உற்சாகக் குரல் எழுப்பினர். சிலர் அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், கைகுலுக்கியும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதேபோல, நேற்று மாலை படப்பிடிப்பு முடிந்து வரும் விஜயைக் காண சாலையின் இருபுறங்களிலும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் திறந்த வாகனத்தில் நின்றபடி விஜய் கையசைத்தார்.

அவர் மீது ரசிகர்கள் மலர்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்று (மே 5) நண்பகல் 12 மணிக்கு தாண்டிக்குடியிலிருந்து கார் மூலம் விஜய் மதுரைக்குப் புறப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

x