சிபிஎஸ்இ-ல் ஃபெயில் ஆக்குவதாகக் கூறினால் பெற்றோர் கையெழுத்திடக் கூடாது: அன்பில் மகேஸ் கோரிக்கை


திருச்சி: சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை ஃபெயில் ஆக்குவதாகக் கூறினால் பெற்றோர் அதில் கையெழுத்திடக் கூடாது. சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என வைத்துள்ளோம். 9, 10-ம் வகுப்புகளின்போது தான் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் உள்ளன. மேலும் அத்தேர்வுகளில் குழந்தைகள் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் எடுக்காவிட்டால் ஃபெயில் ஆக்கவும் வழிமுறை உள்ளது. இது, குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும்.

தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் சிபிஎஸ்இயின் என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் மூலம் வரலாற்றை மறைக்க முயற்சி செய்கிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால்தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

எனவே சிபிஎஸ்இ பள்ளிகள், 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதாகக் கூறி அவர்களை ஃபெயில் ஆக்குவதாகக் கூறினால் பெற்றோர் அதில் கையெழுத்திடக் கூடாது. பெற்றோர்கள் எதிர்த்துக் குரல் எழுப்ப வேண்டும். பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் சிபிஎஸ்இ அழுத்தம் ஏற்படுத்துகிறது. சிபிஎஸ்இயின் இந்த நடவடிக்கையை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. ” என்றார்.

x