மதுரை: சினிமா படப்பிடிப்பில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 நாட்கள் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கும் அவர், மே 5ம் தேதி சென்னை திரும்புகிறார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் முழுநேர அரசியலுக்கு வந்த நிலையில், தனது கடைசி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அவர், அடுத்ததாக மதுரையில் கட்சிப் பிரதிநிதிகளின் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாக இன்று (மே 1) விமானம் மூலம் விஜய் மதுரை வருகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வரும் விஜய், அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி மலைகிராமப் பகுதிக்குச் செல்கிறார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். மே 2 மற்றும் 3, 4-ம் தேதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
படப் பிடிப்புகளை முடித்துக் கொண்டு மே 5ம் தேதி பகல் 12 மணி அளவில் தாண்டிக் குடியில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவருடன் வரும் கமாண்டோ வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பில் ஈடுபட திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.