குடும்பச் சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: கொல்கத்தா தீவிபத்தில் கரூரை சேர்ந்த மூவர் உயிரிழப்பு - நடந்தது என்ன?


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3).

பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கொல்கத்தா படாபஜார் ரபிந்தரசரணி பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட தனியார் ஹோட்டல் ரிதுராஜில் குடும்பத்துடன் பிரபு தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு இரவு உணவு வாங்குவதற்காக பிரபுவும் அவர் மனைவி மதுமிதாவும் வெளியே சென்றுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணன், பிரபுவுக்கு போன் செய்து ஹோட்டலில் தீப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே குழந்தைகளை அழைத்து கொண்டு ஹோட்டலின் மேல்பகுதிக்கு செல்ல பிரபு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அதற்குள் புகைமூட்டம் காரணமாக அறையை விட்டுவெளியேற முடியாமல் முத்துகிருஷ்ணன், அவரது பேரக்குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி, உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்ப சுற்றுலா சென்ற இடத்தில் 3 பேர் உயிரிழந்தது கரூரில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஃபால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று இரவு 8:15 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டன.


இன்று அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து 14 பேர் உயிரிழந்த நிலையிலும், 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர்.

5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க, பலர் ஜன்னல் வழியாக குதித்து உள்ளனர். இதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்த ஹோட்டலில் மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தீவிபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை

x