கேரள அரசை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை: காவல் துறையினருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு


முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியைக் கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுரை/சென்னை: முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

முல்லை பெரியாறு அணை வலுவாக இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரள அரசுபுதிய அணையைக் கட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இதைக் கண்டித்து முல்லை பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடுஅனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மதுரை பீபி குளத்தில் உள்ளவருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மதுரை, தேனி,திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை தமுக்கம் மைதானப் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர்.

ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வருமான வரித் துறை அலுவலகம் செல்ல காவல் துறையினர் அனுமதி அளிக்காததால், தமுக்கம் மைதானம் எதிரே உள்ள அஞ்சல் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் கோஷமெழுப்பினர். பின்னர், கேரள அரசு வெளியிட்ட புதிய அணை கட்டும் அரசாணையை தீயிட்டு எரித்தனர்.

போராட்டத்தின்போது, கேரள அரசு அளித்துள்ள விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்க அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஜெ. வழியை பின்பற்ற வேண்டும்: போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் பிஆர். பாண்டியன் கூறும்போது, முல்லை பெரியாறு அணையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். நீராதார உரிமைகளை காக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்ற வேண்டும் என்றார்.

கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்: இதற்கிடையில், அரசியல்கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கை:

பாமக தலைவர் அன்புமணி: முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவது தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மீண்டும் கூட்டம் நடைபெற்றாலும், அதில் முல்லை பெரியாறு அணை குறித்து எந்த விவாதமும் கூடாது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வல்லுநர் குழு கூட்டத்தில் புதிய அணை குறித்து விவாதிக்க தடை பெற வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கேரளாவில் எந்த கட்சி ஆட்சிக்குவந்தாலும், முல்லை பெரியாறு அணையை உடைக்க முயல்கின்றன. புதிய அணை கட்டும் கேரளஅரசின் சூழ்ச்சியைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன்: தமிழக அரசின் கருத்தைக்கூட அறியாமல், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுமானத்துக்கான முன்மொழிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது, இரு மாநில அரசுகளின் மக்களை மோதவிடும் மத்திய அரசின் வஞ்சகப் போக்காகும். எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, புதிய அணை கட்டுமானத் திட்டத்தை கேரள அரசு கைவிட வேண்டும்.