திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதி வேண்டும்: திமுகவுக்கு ஐயுஎம்எல் கோரிக்கை


திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐயுஎம்எல்) திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மரக்கடையில் நேற்று நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது கவுஸ் என்ற அலல்பக்ஷ் தொடங்கிவைத்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் நிஜாம்தீன் வரவேற்றார்.

தெற்கு மாவட்டச் செயலாளர் ஜி.எச்.சையது ஹக்கீம், பொருளாளர் பி.எம்.ஹுமாயூன், மாணவர் அணி மாநிலத் தலைவர் அன்சர் அலி உள்ளி்ட்டோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் பஷீர், துணைச் செயலாளர் வி.எம்.பாரூக், விவசாய அணி தலைவர் அப்துல் ஹாதி, மகளிர் அணி செயலாளர் பேராசிரியை பைரோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டுப் பெற கட்சியின் மாநில தலைமைக்கு கோரிக்கை வைப்பது. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகில் 3 மத வழிபாட்டுத் தலங்கள் அமைய இடம் ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x