தமிழக பாடத் திட்டத்தில் திராவிட இயக்க வரலாறே நிறைந்துள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு


உதகை: தமிழக பாடத் திட்டத்தில் திராவிட இயக்க வரலாறே நிறைந்துள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் 2 நாள் மாநாடுநேற்று மாலை நிறைவடைந்தது. நிறைவு விழாவில் துணைவேந்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி தமிழகஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி பேசியதாவது:

கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. எனவே,பல்கலைக்கழகங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பல கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள்தான் பாடம் நடத்துகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிராமங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இதுதான் கல்லூரி மாணவர்கள் செய்ய வேண்டிய வேலையா? உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி, பள்ளிகளின் தளவாடப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுக்கு 1,500 மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுகின்றனர். அவர்களில் 5 சதவீதம் மாணவர்களே தரம் மிக்கவர்களாக இருகின்றனர். மற்றவர்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. ‘நெட்’ தேர்வு குறித்து தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு அதிக விழிப்புணர்வு உள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர்.

தமிழக பாடத் திட்டத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்ற சில சுதந்திரப்போராட்ட தியாகிகள் வரலாறு மட்டுமே உள்ளது. பிற சுதந்திரப் போராட்டத் தியாகிகள், இயக்கங்கள் குறித்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு வேதனைஅளிக்கிறது. அதேபோல, குறிப்பிட்ட சமுதாய தலைவர்களை பற்றி அதிக வரலாறு இல்லை.ஆனால், திராவிடத் தலைவர்கள் மற்றும் இயக்க வரலாறே நிறைந்துஉள்ளது.

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பங்களை அறியாவிட்டால், பின் தங்கிவிடுவார்கள். மத்திய அரசின் செயல் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழக மாணவர்கள் திறமையானவர்கள். அவர்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர்பேசினார். விழாவில், அண்ணாபல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ஜி.அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.