திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித் ஷா பேசிக்கொள்வார்கள் என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்குத் தெரியும். செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அதில், நாங்கள் கருத்துச் சொன்னால் சரியாக இருக்காது. இலையும், தாமரையும் கூட்டணியாகச் சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அமித் ஷா, இபிஎஸ் பேசிக்கொள்வார்கள். திமுக மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது. முதலில் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அனைவருக்கும் நாட்டுப்பற்று வேண்டும். அதைப் புரிந்துகொண்டு தலைவர்கள் அனைவரும் நாட்டின் நன்மை கருதிப் பேச வேண்டும். தொலைக் காட்சியில் வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது.
பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். அவர் போன்ற நபர்களுக்கு எனது வணக்கங்கள்” என்றார்.