சிகரெட் லைட்டர் விற்க தடை விதிக்க நடவடிக்கை: அதிமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்


தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், ஏழை பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக தீப்பெட்டித் தொழில் உள்ளது. அந்த தொழிலுக்கு சிகரெட் லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் லைட்டர் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதுபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது: தென் மாவட்டங்களில் கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பிரதான தொழிலாக விளங்குகிறது. ரூ.20-க்கு கீழ் லைட்டர் விற்கப்படுவதால் பெண் தொழிலாளர்கள் உள்பட, தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. லைட்டர் விற்பனையால் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்பதை அரசு அறியும்.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிகரெட் லைட்டர்களும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடியவைதான். இதன் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை செய்வது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, அரசு பரிசீலனையில் உள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

x