[X] Close

நிமிடக்கதை: அவரவர் உலகம்; அவரவர் சமையல்!


nimidakkadhai

  • kamadenu
  • Posted: 21 Aug, 2018 10:42 am
  • அ+ அ-

கல்யாணப் பந்தலில் சாப்பாட்டுக்கடை ஆரம்பிக்கப்பட்டது. பந்திகள் நீண்டுகொண்டே இருந்தன. அமர்ந்தவர்கள் எழுந்துபோக மனம் இல்லாதபடி ருசி கட்டிப்போட்டது. விட்டுப் போன சொந்தங்கள் கூட கல்யாணத்திற்குத் வந்த காரணம் பத்திரிகையில் இருந்த கேட்டரிங் செய்பவரின் பெயர் - சமையல் ராமையர்.

ராமையர் சமையல் என்றால் அற்புதம், இல்லை இல்லை,மகா அற்புதம். அவர் கைகளில் என்ன மாயமோ, ஒரு டம்ளரில் அவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தால் கூட அது தேவாம்ருதமாக இனிக்கும். சிலருக்கு சில பதார்த்தங்கள் மிக நன்றாகச் செய்ய வரும். செல்லப்பாவின் போளி, சேஷுவின் ரசம் என்று சாப்பாட்டு ரசனைக்காரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்த தகவல். ஆனால் இவர்களே ராமையர் சமையல் பற்றிக்கேட்டால் சற்றே திகைத்து, பின் இன்னும் சற்றே விழித்து, நிதானமாகச்  சொல்லும் ஒரு சொல் “ எல்லாமும்தான்”

அன்றும் சாப்பாட்டுக்கூடம் களை கட்டியது. யாவரும் இரண்டாவது, மூன்றாவது முறை என்று வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பந்தி கணக்கு பார்க்கப்பட்டது. தலைகளின் எண் கணக்கிடப்பட்டு நோட் புக் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது.

அனைவரும் சாப்பிட்டு முடித்தபின் சமையல் கோஷ்டி சாப்பிடத் தொடங்கியது. ஆனால் ராமையர் வீட்டுக்குக் கிளம்பினார், சாப்பிடாமல்.

வாசலில் பெண்ணின் தகப்பனார் "உங்கள் கைக்கு வைரமோதிரம் செய்து போடவேண்டும்" என்பதைத் தலை அசைத்து ரசித்துச் சிரித்தார். பிள்ளையின் அம்மா வாய் நிறைய வெற்றிலையுடன் முகத்தில் சாப்பாட்டின் சுகம் பொங்கி வழிய “ரொம்ப நன்றாக இருந்தது மாமா இன்றைய சமையல். எங்க எல்லோருக்கும் ரொம்ப திருப்தி. மனசு நிறைஞ்சு பொண்ணு பிள்ளையை வாழ்த்திட்டுப் போனார்கள் . அதுக்கு ஸ்பெஷல் நன்றி , மாமா “ என்று வாய் விட்டுப் பாராட்டினாள். ராமையர் இப்படிப்பட்ட பாராட்டுகளுக்கு பழகியவர்தான். பணிவாக உடலை வளைத்து ஒரு நமஸ்காரத்தை அவருக்கும் வைத்தார்.

“ரொம்ப நன்றிமா. உங்களுக்குத் திருப்தி என்பதைக் கேட்பதில்தான் எனக்குத் திருப்தி” என்று சொன்னார் ராமையர்.

“ அண்ணா , நீங்க சாப்பிட்டேளா?’ என்று நாதஸ்வர வித்வான் கேட்க ,

“பாருடா, அதைக் கேட்காமல் எதையோ இல்ல பேசறேன், ராமையர் சாப்பிட்டேளா?” என்று பெண்ணின் தகப்பனார் கேட்க... பொத்தாம் பொதுவாக தலையாட்டினார். அதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும்படிதான் இருந்தது.

“சரி, அர்ஜெண்டா எங்கேயோ கிளம்பிட்டேள். நான்தான் பேச்சுக்கொடுத்து நிறுத்திட்டேன். நீங்க கிளம்புங்க “ என்றபடி தன் வேலைக்குத்திரும்பினார்.

புன்சிரிப்போடு ராமையர் கிளம்பினார்.

வீட்டுக்குச் சென்றவர், பசியோடு தனக்காகக் காத்திருந்த மனைவியைப் பார்த்து ...  

" பார்வதி, பசி வயிற்றைக்கிள்ளறது, என்ன சமைச்சிருக்கே சீக்கிரம் போடு" சாப்பிடத் தொடங்கினார்.

 உப்புப்போட மறந்த ரசமும், காரமாக சுள்ளிட்ட காயும் அவருக்கு என்னவோ நளபாகமாகத்தான் தெரிந்தது.

 - லதா ரகுநாதன்

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close