[X] Close

சர்ச்சைப் பேச்சால் ‘பின்வாங்கிய’ கோலி: வறுத்தெடுத்த ரசிகர்கள்; நெட்டிசன்களுக்கு மழுப்பல் பதில்


virat-kohli-tweet

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 19:58 pm
  • அ+ அ-

இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ரசிகர்களும், நெட்டிசன்களும் வறுத்தெடுத்த நிலையில், மழுப்பலாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

விராட் கோலி தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஆப்ஸ் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ரசிகர் பதிவிட்ட கருத்தில், ''விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன்'' என்று சாடியிருந்தார்.

அவருக்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட விராட், ''இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை'' என்று கருத்து தெரிவித்தார்.

இந்தக் கருத்து ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் கிளப்பியது. விராட் கோலியை டிரால் செய்து மிகக்காட்டமான கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர். விராட் கோலி ஏன் திருமணத்தை வெளிநாட்டில் நடத்தினார், அவர் இத்தாலியில் வசிக்கலாம் என்று சிலரும், வெளிநாட்டு கால்பந்து வீரர்களைப் பிடிக்கும் என்று கூறிய கோலி, ஜெர்மன், ஸ்பெயின் நாட்டுக்குச் செல்லலாம் என்றும் ரசிகர்கள் சாடி இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் ரசிகர்கள் வசிக்கக்கூடாது என்று கூற கோலிக்கு உரிமை என்று சிலர் கண்டனம் தெரிவித்தும், வலதுசாரி இயக்கத்தினர் போல் கோலி கருத்து தெரிவிக்கிறார் என்றும் விமர்சித்திருந்தனர்.

தனது பேச்சுக்கு நாளுக்கு நாள் கண்டனம் வலுத்து வருவதை அறிந்த விராட் கோலி ட்விட்டரில் இன்று மழுப்பலாகக் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ ரசிகர்கள் என்னை டிரால் செய்யவில்லை, என்னை விமர்சிக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். என்னை டிரால் செய்தால் அதோடு நானும் இணைந்துகொள்வேன். நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுத்தான் பேசினேன்.

அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை எந்த நாட்டு கிரிக்கெட் வீரரை யாரும் ரசிக்கலாம். அதில் தேர்வு செய்வதில் நான் சுதந்திரம் இருப்பதை விரும்புபவன். நான் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அன்பும், அமைதியும் கிடைக்கட்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்ற பேச்சுக்கு கோலி தனது ட்விட்டரில் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close