பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!


தினேஷ் கார்த்திக்

17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று நடைபெற்ற போட்டியுடன் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். தமிழ்நாடு ரஞ்சி கோப்பைக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் அவர், ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதுவரை 257 ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களைக் குவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்

22 அரை சதங்கள் உட்பட அதிகபட்சமாக 97 ரன்கள் குவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பிரியாவிடை அளித்தனர். இந்தியாவிற்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,025 ரன்கள் அவர் குவித்துள்ளார். டெஸ்டில் அதிகபட்சமாக 129 ரன்களை விளாசியுள்ள தினேஷ் கார்த்திக், 57 கேட்ச் மற்றும் 6 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கை வாழ்த்தும் விராட் கோலி

இதேபோல் 94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1,852 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 79 ரன்கள் அடித்துள்ளார். 64 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார். 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 672 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்து உள்ளார். 26 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்குகளை செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக்

2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்று கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கமாக இருந்துள்ளார். இவரது மனைவி தீபிகா பல்லிகல், சர்வதேச விருதுகளை வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆண்டுகளாக விளையாடி வந்த போதும், ஐபிஎல்-ல் கோப்பை வென்ற ஒரு அணியிலும் தினேஷ் கார்த்திக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x