ஐபிஎல் பிளே ஆஃப் குவாலிபயர் 1 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களில் சுருண்டது.
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதலில் செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் 1 இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணி முதல் பேட்டிங்கில் பலமான அணி என்பதால், பேட் கம்மின்ஸ் இந்த முடிவை எடுத்தார்.

தொடர்ந்து ஹைதராபாத் அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கியது. கேகேஆர் அணி தரப்பில் முதல் ஓவரை வீச மிட்சல் ஸ்டார்க் வந்தார். முதல் ஓவரின் 2வது பந்திலேயே மிட்சல் ஸ்டார்க் பந்தில், அதிரடி பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட் போல்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து அபிஷேக் சர்மா 2 வது ஓவரில் அரோரா பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களின் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார், அதே ஓவரில் ஷர்பாஸ் அகமதுவும் ஆட்டமிழந்தார். இதனால் 5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 39 ரன்களில் தவித்தது.

அதனைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஆகியோர் ஓரளவு கொல்கத்தா பந்துவீச்சை சமாளித்து ஆடினார்கள். இந்த கூட்டணி 11 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து ஆடினர். 11வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்தில் கிளாசன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய திரிபாதி 55 ரன்களில் ரன் அவுட்டானார். அதற்கு அடுத்த பந்தில் ஷன்விர் சிங் சுனில் நரைன் பந்தில் டக் அவுட்டானார்.
தொடர்ந்து அப்துல் சமது மற்றும் புவனேஷ் குமார் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஹைதராபாத் 126 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் பாட் கம்மின்ஸ் மற்றும் வியாஸ்காந்த் தாக்குப்பிடித்து ஆடினர். கடைசியாக கம்மின்ஸ் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.