ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ரியோ பாராலிம்பிக் சாம்பியனான மாரியப்பன் உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T63 பிரிவு) போட்டியில் 1.88 மீட்டர் தாண்டி இவர் தங்கப் பதக்கம் வென்றார்.
மாரியப்பன் தங்கவேலு அமெரிக்க வீரர்களான எஸ்ரா ஃப்ரீச் (1.85 மீ) மற்றும் சாம் க்ரூ (1.82 மீ) ஆகியோரை முந்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மற்ற இரண்டு இந்திய வீரர்களான வருண் பாடி மற்றும் ராம்சிங்பாய் படியார் ஆகியோர் முறையே 4 மற்றும் 7வது இடங்களைப் பிடித்தனர். வருண் பாடி பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனாலும் அவர் 1.78 மீ உயரம் தாண்டி 4ம் இடம் பிடித்ததால் பாரிஸ் பாராலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.
பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்கெனவே இந்தியாவின் சார்பில் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷைலேஷ் குமார் ஆகியோர் தகுதிபெற்றுள்ள நிலையில், இப்போது மூன்றாவது வீரராக வருண்பாடி தகுதி பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பாரா-ஈட்டி எறிதல் வீரரான சுமித் ஆன்டில் தனது இரண்டாவது முயற்சியில் 69.50 மீட்டர் தூரம் எறிந்து ஆடவருக்கான ஈட்டி எறிதல் F64 பிரிவில் தங்கம் வென்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4-வது நாளான இன்று, இந்தியா 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் 10 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் சீனா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.