பவுண்டரி, சிக்ஸர்கள் மட்டும்தான் கிரிக்கெட்டா?... இம்பாக்ட் பிளேயர் விதியை விளாசிய விராட் கோலி!


விராட் கோலி

இம்பாக்ட் பிளேயர் விதி கிரிக்கெட் விளையாட்டின் சமநிலையை சீர்குலைக்கிறது என்று இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவும் இந்த விதிக்கு எதிராக ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டு வரப்பட்டது. இந்த புதிய விதிகள் காரணமாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை சேர்த்து விளையாட முடியும். ஆனால் இம்பேக்ட் பிளேயர் விதியால் பவுலர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரில் 250 ரன்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டதால், பவுலர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது. இந்த விதிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, அக்சர் படேல் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

விராட் கோலி

தற்போது, விராட் கோலியும் இம்பாக்ட் பிளேயர் விதியை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியுள்ளார். அவர், “ரோகித்தின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். பொழுதுபோக்கு என்பது விளையாட்டின் ஒரு அம்சம் மட்டும்தான், ஆனால் இப்போது ஆட்டத்தில் சமநிலை இல்லை. இம்பாக்ட் பிளேயர் விதி சமநிலையை சீர்குலைத்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் மட்டுமல்ல, நிறைய பேர் இப்படி உணர்கிறார்கள். இந்த விதி ஆல்ரவுண்டர்களைத் தடுக்கப் போகிறது. கிரிக்கெட்டில் 11 வீரர்கள் விளையாடுகிறார்கள், 12 பேர் அல்ல.

பந்து வீச்சாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் ஃபோர் அல்லது சிக்ஸரை விட்டுக் கொடுப்பார்கள் எனும் சூழலை நான் அனுபவித்ததில்லை. ஒவ்வொரு அணியிலும் பும்ரா அல்லது ரஷித் கானின் மர்மம் இல்லை.

விராட் கோலி

கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருக்கிறார் என்ற காரணத்தினால் என்னால் பவர் பிளே ஓவர்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடிகிறது. ஏனென்றால் நம்பர் 8 வரை ஒரு தரமான பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று நன்றாக தெரியும். ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களுக்கும் பவுலர்களுக்கும் சமநிலை நிலவ வேண்டும். யாரும் அதிகாரத்தை செலுத்துவதாக இருக்கக்கூடாது.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவர்கள் இந்த விதியை மறுபரிசீலனை செய்வார்கள் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். அடுத்த சீசன் ஐபிஎல்க்கு முன்பு 10 அணிகளின் உரிமையாளர்களும் இதைப் பற்றி யோசிக்கவேண்டும். விளையாட்டை சமநிலைக்கு கொண்டு வரும் ஒரு முடிவுக்கு அவர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு பேட்ஸ்மேனாக, இந்த விதி நல்லது என்று என்னால் கூற முடியும். ஆனால் போட்டி உற்சாகமாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸ்களை அடிப்பது மட்டுமே சுவாரஸ்யத்தை கொடுக்காது. 160 ரன்களை டிஃபெண்ட் செய்வதும் நிச்சயம் சுவாரஸ்யமாக தான் இருக்கும்” என்று விராட் கோலி கூறியுள்ளார்.

ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி ஆட்டக்காரர்கள் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிராக பேசுயுள்ளது ஒருபுறம் என்றாலும், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களும் இந்த விதியால் சோர்வடைந்துள்ளனர். எனவே இந்த விதிகளில் ஐபிஎல் நிர்வாகம் மாற்றம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

x