டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்களுக்கு தரக்குறைவான உணவு வழங்கியதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க(கேஎஸ்சிஏ) மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 12-ம் தேதி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் டெல்லி மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான 17வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது, போட்டியைக் காண வந்தவர்களுக்கு மோசமான உணவு வழங்கியதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (கேஎஸ்சிஏ) நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. கத்தார் ஏர்வேஸ் ஃபேன்ஸ் மொட்டை மாடியில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட சைதன்யா(23) இளைஞர் ஒருவர், சில நிமிடங்களிலேயே வயிற்று வலியால் துடித்துள்ளார். அத்துடன் அவர் அமர்ந்திருந்த இடத்திலேயே அவர் மயங்கிச் சரிந்தார்.
உடனடியாக மைதான ஊழியர்கள், சைதன்யாவை மீட்டு ஆம்புலன்ஸில் முதலுதவி அளித்து தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். பின்னர் மருத்துவர் பரிசோதித்த போது, சைதன்யா சாப்பிட் உணவு விஷம் என்பதை உறுதி செய்தார்.
இதன் அடிப்படையில், தனக்கு தரக்குறைவான உணவு வழங்கப்பட்டதாக சைதன்யா, கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கேஎஸ்சிஏ மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கேஎஸ்சிஏ மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியின் போது தரக்குறைவான உணவு பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது இது முதல் முறையல்ல.
இங்கு போட்டியைக் காண வந்த பார்வையாளர்கள், உணவு விநியோகம் குறித்து சமூக வலைதளங்களில் பலநேரங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!