இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்


இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தற்போது சுனில் சேத்ரி பதவி வகித்து வருகிறார். கடந்த 1984ம் ஆண்டு தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் பிறந்த சுனில் சேத்ரி, கடந்த 2002ம் ஆண்டு முதல், தொழில்முறை ரீதியிலான கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள சுனில் சேத்ரி, உலகளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

தற்போது விளையாடி வரும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (128), லயோனல் மெஸ்ஸி (106) ஆகியோருக்கு அடுத்தபடியாக, 94 கோல்களுடன் அவர் 3வது இடத்தில் உள்ளார். இந்திய கால்பந்து அணியில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு கிளப் அணிகளுக்காகவும் சுனில் சேத்ரி விளையாடி வந்துள்ளார். விளையாட்டுத் துறையில் அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில், கடந்த 2011ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்த சுனில் சேத்ரி தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அடுத்த மாதம் குவைத் கால்பந்து அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியுடன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

x