டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு... 700 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவிப்பு!


தரம்சாலா மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டசன், டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், அந்நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடந்த 2002ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் ஒரு நாள் போட்டிகளில் களம் இறக்கினார். இதைத்தொடர் 2003ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் அசத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு அணிகளுக்கு எதிராக களமிறங்கி ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டி மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

தற்போது 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் கள் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 800 விக்கெட்களுடன் இலங்கையின் முத்தையா முரளிதரனும், 2வது இடத்தில் 708 விக்கெட்டுகளுடன் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவும் உள்ளனர். அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் 4 இடங்களில் உள்ள ஒரே வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

கடந்த சில நாட்களாகவே அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முடிவில், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

'20 ஆண்டுகளுக்கு மேலாக எனது நாட்டுக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே இந்த விளையாட்டை நான் நேசித்து இருக்கிறேன். இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறுவது கடினமாக உள்ளது. ஆனால் இது சரியான நேரம் என நான் கருதுகிறேன். மற்றவர்கள் அவர்களது கனவுகளை நிறைவேற்ற இது வாய்ப்பளிக்கும் என்பதால், எனக்கு பெரிய வருத்தம் எதுவும் இல்லை’ என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

x