ஒரே நாளில் 20 விக்கெட்: தென்னாப்பிரிக்கா, இந்தியா டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யம்!


விக்கெட் வீழ்ந்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் அனைத்து வீரர்களும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர்.

153 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி

இதன் காரணமாக 23.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 55 ரன்கள் மட்டும் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முகேஷ் குமார் 2.2 ஓவர்களை வீசிய நிலையில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவரது எக்கனாமி பூஜ்ஜியமாக இருந்தது.

தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸை துவக்கி விளையாடி வருகிறது

இதை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய நிலையில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் ரோகித் சர்மா 39 ரன்களிலும், விராட் கோலி 46 ரன்களிலும், சுப்மன் கில் 36 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் வந்த வீரர்களில் ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இதனால் 34.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியில் ரபாடா, இங்கிடி, பெர்கர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது ரசிகர்களிடையே விவாத பொருளாக மாறியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x