ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோரது பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த அணி வரும் ஜாக்ரெப் ஓபன் 2024 தரவரிசை தொடரில், குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பில் ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெற உள்ள முதல் உலக தரவரிசைப் போட்டித் தொடரில் முத்திரை பதிக்கத் தயாராக உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) நியமித்துள்ள அட் ஹாக் கமிட்டியின் தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அணியில் 13 வீரர், வீராங்கனை கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த 13 மல்யுத்த வீரர்களுடன், 9 பயிற்சி, துணை ஊழியர்கள் மற்றும் மூன்று நடுவர்கள் குரோஷியா செல்கின்றனர்.

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் போட்டியில் அமன் செஹ்ராவத் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பஜ்ரங் புனியா மட்டும் அணியில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து மல்யுத்த சம்மேளனத்தின் தற்காலிக குழுவின் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா கூறுகையில், “ஆசிய விளையாட்டு அணியில் இடம் பெற்றிருந்த மல்யுத்த வீரர்களின் சம்மதத்தை நாங்கள் கோரியிருந்தோம். அதில், 13 பேர் மட்டுமே தங்கள் சம்மதத்தை வழங்கிய நிலையில், 5 பேர் சம்மதம் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பஜ்ரங் புனியா அணியில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியபோது, “பஜ்ரங் இன்னும் மேட் பயிற்சியைத் தொடங்கவில்லை. எனவே இந்திய அணியில் இடம்பிடிப்பது வீண்” என்று கூறினார்.