விஸ்வநாதன் ஆனந்தை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று செஸ் வீரர் குகேஷ் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
17 வயதான சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இதற்கு முன்னர் ரஷிய நட்சத்திர வீரரான கேரி கேஸ்பரோவ், 1984ல் தனது 22 வயதில் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றதே குறைந்தபட்ச வயதாக இருந்தது. குகேஷ் 40 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை முறியடித்திருக்கிறார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய அவருக்கு தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தன்னுடைய குரு விஸ்வநாதன் ஆனந்த் குறித்து பேசிய குகேஷ், "என்னுடைய செஸ் கேரியரில் விஸ்வநாதன் ஆனந்த் மிகப்பெரிய ரோல் ஆக உள்ளார். அவர் இல்லையென்றால் நான் இந்தளவிற்கு செஸ் போட்டியில் ஜெயித்திருக்க முடியாது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் விஷி சார் மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளார். அவருடைய அகாடமியில் செஸ் பயிற்சி பெற்றது மிகப்பெரிய பயனாக இருந்தது. அதற்காக இறுதிவரையில் அவருக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர் இல்லையென்றால் நான் இந்தளவிற்கு உயரத்துக்கு வந்து இருக்க முடியாது" என்றார்.