சுப்மன் கில் இதை உணர வேண்டும்; சுனில் கவாஸ்கர் ஆலோசனை!


டெஸ்டில் ரன்கள் குவிக்க திணறும் சுப்மன் கில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரர் சுப்மன் கில், ஆக்ரோஷமாக விளையாடுவதாகவும், சிவப்பு பந்து வேகமாக நகரும் என்பதை அவர் உணர வேண்டும் எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 2 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் 26 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

சுப்மன் கில்லுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை

மிகப்பெரிய அளவில் ரன்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில், குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வருவது ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் விமர்சகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அவரது ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்

”டெஸ்ட்போட்டியில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக நினைக்கிறேன். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில், வெள்ளை பந்தில் விளையாடுவதை காட்டிலும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. சிவப்பு பந்து, வெள்ளை பந்தைக் காட்டிலும் காற்றில் வேகமாக நகரும். அதே போல் ஆடுகளத்திலும் சிவப்பு பந்து வேகமாக நகரும். வெள்ளை பந்தைக் காட்டிலும் சிவப்பு பந்தில் பவுன்சர்கள் அதிகமாக இருக்கும். இவற்றை சுப்மன் கில் மனதில் வைத்து விளையாட வேண்டும்” என சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவரை நடைபெற்ற 9 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில், 21, 5, 13, 18, 6, 10, 29*, 2, 26 ஆகிய ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்று வெளியான ஐசிசி தகவலின்படி, அனைத்து வகையான போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x