தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டீன் எல்கர் இந்தியாவிற்கு எதிரான தொடருடன் ஓய்வு பெற உள்ளதால், 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து டெஸ்ட் தொடர் துவங்கிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மட்டும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. அவர் இல்லாத நிலையில் நட்சத்திர வீரர் டீன் எல்கர் அணியை வழிநடத்தினார். இந்த போட்டியில் டீன் எல்கர் சிறப்பாக விளையாடி 185 ரன்கள் குவித்திருந்தார். மேலும் கேப்டன் இல்லாத சமயத்தில் பொறுப்பு கேப்டனாக பதவி வகித்து மிகப்பெரிய வெற்றியையும் அணி ஈட்ட வழிவகை செய்திருந்தார். இதையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தொடருடன் தான் ஓய்வு பெற இருப்பதாக டின் எல்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதையடுத்து கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக செயல்படுவார் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள கேப்டன் டெம்பா பவுமா இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜுபையர் ஹம்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!