தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாவதுஇந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை செஞ்சூரியனில் விளையாடியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களையும், தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டீன் எல்கர் 185 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய மார்கோ ஜான்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது போலவே ரோகித் சர்மா (0) மற்றும் ஜெய்ஷ்வால் (5) ஆகியோர் ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழந்தனர். அவர்கள் பின்வந்த சுப்மன் கில், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து நிற்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26 ரன்களுக்கு மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்கள், கே.எல்.ராகுல் 4 ரன்கள், அஸ்வின் 0 ரன்கள், ஷர்துல் தாக்கூர் 2 ரன்கள், பும்ரா 0 ரன்கள், சிராஜ் 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிவரை போராசிக்கொண்டிருந்த விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஜான்சென் பந்தில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா 0 ரன்களுடனும் களத்தில் இருந்தார். இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தில் 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் பந்துவீச்சில் துவம்சம் செய்தனர். அதிகபட்சமாக பர்கெர் 4 விக்கெட்டுகளையும், ஜான்சென் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா தரப்பில் 185 ரன்களை குவித்த எல்கர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இந்திய அணியின் தரப்பில் முக்கிய ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் போன்றவர்கள் இந்த டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினர். முக்கியமாக கேப்டன் ரோகித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் 5 ரன்களையும், 2ம் இன்னிங்ஸில் 0 ரன்களும் எடுத்து ஏமாற்றமளித்தார். இந்திய பேட்ஸ்மேன்களின் அடுத்தடுத்த சரிவு காரணமாக தென்னாப்பிரிக்க அணி 3 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவது இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!
பி.எஃப் முன்பணம் இனி எடுக்க முடியாது... ஊழியர்கள் அதிர்ச்சி!