ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் இடையே திடீரென 3வது நடுவர் மாயமான சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. உணவு இடைவேளைக்காக இரு அணிகளும் சென்றுவிட்டு மீண்டும் களத்திற்கு திரும்பினர். இதையடுத்து களத்தில் இருந்த நடுவர்கள் ஜோயல் வில்சன் மற்றும் மைக்கேல் கோஹ் ஆகியோர் போட்டியை தொடங்க அனுமதிக்குமாறு 3வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்க்வொர்த்திடம் அனுமதி கேட்டனர்.
ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால், அவர் இருந்த இடத்தை நோக்கி கேமராக்கள் திருப்பப்பட்ட போது, அவர் இருக்கையில் இல்லாதது தெரியவந்தது. இதனால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. இதையடுத்து, 3வது நடுவர் மாயமான காரணம் குறித்து, போட்டி அறிவிப்பாளர்கள் அறிவித்தனர். உணவு இடைவேளையின் போது வெளியே சென்றிருந்த ரிச்சர்ட், லிப்டில் ஏற்பட்ட பழுதால், சிறிது நேரம் உள்ளே மாட்டிக்கொண்டுள்ளார். அவர் அவசர பட்டனை அழுத்தியதால், மைதான பணியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை அங்கிருந்து மீட்டனர்.
இதையடுத்து மீண்டும் தனது பணியிடத்திற்கு அவர் திரும்பியதை அடுத்து, போட்டி தொடர்ந்தது. இதனிடையே 3வது நடுவர் மாயமாகிவிட்ட செய்தியை அறிந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மைதானத்தில் விழுந்து விழுந்து சிரித்ததால், ரசிகர்களும் சிரிப்பில் ஆழ்ந்தனர். இதையடுத்து 3வது நடுவர் தான் மீண்டும் வந்துவிட்டதை உணர்த்தும் வகையில் ரசிகர்களை நோக்கி கைகளை ஆட்டி சைகை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!